பொது

சுட்டுக் கொல்லப்பட்ட அந்நிய நாட்டவர் ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்

21/08/2024 05:25 PM

சுபாங் ஜெயா, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- செவ்வாய்க்கிழமை மாலை சிலாங்கூர், சுபாங் ஜெயா, ஜாலான் பி.ஜே.எஸ் 9/1-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

மாலை மணி 6.59-க்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில், சிவப்பு நிறத்திலான Hyundai Matrix ரகக் காரை செலுத்தி வந்த நாற்பது வயதிற்குட்பட்ட அவ்வாடவரை, காரை நிறுத்தும்படி, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே உறுப்பினர்கள் கட்டளையிட்டதாக அதன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹய்லி முஹமட் சேன் தெரிவித்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அவ்வாடவர் ஐந்து முறை சுட்டதில், அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது இரு தோட்டாக்கள் பாய்ந்ததாக நேற்றிரவு சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

இதனிடையே, 2018-இல் இருந்து இவ்வாண்டு வரை 45 கொள்ளைச் சம்பவங்களை உட்படுத்தி சுமார் 80 லட்சம் ரிங்கிட் வரையிலான இழப்பை ஏற்படுத்திய அக்கும்பலுக்கு தமது தரப்பு வெகுநாள்களாக வலை வீசி வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதோடு, இன்னும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இருப்பதாக நம்பப்படும் அக்கும்பலைச் சேர்ந்த சுமார் பத்து பேரை தமது தரப்பு தேடி வருவதாகவும் முஹமட் ஷுஹய்லி தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]