பொது

பொருட்களின் விலை நியாயமற்ற முறையில் உயர்த்தப்படுவதைக் காண விரும்பவில்லை - சாஹிட்

22/08/2024 04:16 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அண்மையில் அரசாங்கம் அறிவித்திருக்கும் ஊதிய உயர்வு திட்டத்தைத் தொடர்ந்து, பொருட்களின் விலை, நியாயமற்ற முறையில் உயர்த்தப்படுவதைத் தாம் காண விரும்பவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி நினைவுறுத்தினார்.

''பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கடப்பாட்டில் நாம் இருக்கிறோம். அதன் பொருட்டு பணியாளர்கள், சேவைகள் மற்றும் பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனால்தான் இவ்வாண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தை மறுசீரமைப்பதற்கும் நாம் எவ்வாறான ஆலோசனைகளை வழங்கலாம் என்பது சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.

மேலும், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்களின் துறைக்கான பங்களிப்பை குறிப்பாக, மடானி அரசாங்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் முனைப்போடு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் டாக்டர் அஹ்மட் சாஹிடி நினைவூட்டினார்.

அதோடு, அரசாங்க உதவித் தொகை குறித்து கருத்துரைத்த அவர் தகுதியானவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோர் பயனடையும் வகையில் உதவித் தொகை வெளியீட்டிற்காக அரசாங்கம் பெரிய அளவிலான மானியத்தை செலவிட்டுள்ளதையும் அவர் கோடிகாட்டினார்.

மற்றொரு நிலவரத்தில், மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஜோகூர் மாநில அம்னோ மற்றும் குளுவாங் அம்னோ தொகுதியிடம் இருந்து அக்கட்சி தலைமையகம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் அந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தமது தரப்பு பரிசீலனை செய்யும் என்றார் அவர்.

"புதிய முகமா இல்லையா என்பது கட்சியைப் பொறுத்தது. இளைஞர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, சீரான முறையில் பரிசீலிக்கப்படும்,'' என்று டாக்டர் சாஹிட் ஹமிடி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)