பொது

அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை மறுத்தார் முகிடின்

27/08/2024 05:08 PM

கிளந்தான், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அண்மையில், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் இன்று குவா மூசாங் செஷன் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

நீதிபதி நிக் முஹமட் தர்மிசி நிக் முஹமட் ஷுக்ரி முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது முகிடின் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.

குவா மூசாங், செமாய் பக்தி ஃபெல்டா பெராசு மண்டபத்திற்கு அருகில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான அவர் இச்செயலைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, இரவு மணி 10.30 முதல் 11.50-க்கு இடையில் முகிடின் இந்த அவதூறான வார்த்தைகளை உச்சரித்தது தெரிய வந்துள்ளது.

1948ஆம் ஆண்டு நிந்தனை சட்டம், பிரிவு 4(1)(b)-இன் கீழ் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

5,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் அதே சட்டத்தின் துணை செக்‌ஷன் 4(1)-இன் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம்.

தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் முகிடினை, 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதோடு, இவ்வழக்கின் மறு செவிமடுப்பு நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)