பொது

முந்தைய நீதிபதி குழுவின் முடிவை மறுஆய்வு செய்ய முகிடின் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

11/09/2024 06:25 PM

புத்ராஜெயா, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட் நிதியை உட்படுத்தி, தாம் எதிர்நோக்கி இருக்கும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை மீண்டும் நிலைநிறுத்திய முந்தைய நீதிபதி குழுவின் முடிவை மறுஆய்வு செய்யுமாறு முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் செய்த விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அரசு தரப்பின் மேல்முறையீட்டை விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் முந்தைய குழுவுக்குத் தேவையான அதிகார வரம்பு இருப்பதாகக் கூறி, நீதிபதி டத்தோ அசிசா நவாவி தலைமையிலான ஐவர் அடங்கிய குழு ஏகமனதாக அத்தீர்ப்பை வழங்கியது.

டத்தோ செ முஹமட் ருசிமா கசாலி, டத்தோ அஹ்மட் சைடி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ அஸஹாரி கமால் ரம்லி ஆகியோரே இதர நான்கு நீதிபதிகளாவர்.

இத்தீர்ப்பின் வழி, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக முகிடின் விசாரணை தொடரப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)