பொது

மனித கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை

07/09/2024 06:46 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- மியன்மாரில் மனித கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நாட்டின் அரசியல்வாதி ஒருவர் மற்றும் அவரது கணவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இதுவரை பெறப்படவில்லை என்று தேசிய போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

அந்த அரசியல்வாதி உட்பட மேலும் சிலரின் வங்கிக் கணக்குகளில் மேற்கொண்ட சோதனையின் மூலமாகவும், மேலும் 11 பேரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், இந்த மோசடி தொடர்பிலான எந்தவொரு முதலீட்டையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சொத்து முதலீடு தொடர்பாக மூவருடன் அந்த அரசியல்வாதியும் அவரது கணவரும் மியன்மார் சென்றிருந்ததை முன்னதாக போலீஸ் உறுதிபடுத்தியது.

எனினும், அவர்கள் அங்கு எந்தவொரு முதலீட்டையும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டான் ஶ்ரீ ரசாருடின் விவரித்தார்.

மியன்மாரில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்களை அடையாளம் காண செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 'டத்தோ ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட ஒருவரின் நடவடிக்கை குறித்து தற்போதைய விசாரணை கவனம் செலுத்தி வருவதாக அவர் பெர்னாமாவிடம் குறிப்பிட்டார்.

2020-ஆம் ஆண்டிலிருந்து மியன்மாரில் செயல்படும் அனைத்துலக மனித கடத்தல் கும்பலுடன் முன்னாள் துணை அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அந்நபர் மறுத்துள்ள நிலையில் அது குறித்து புகாரும் அளித்துள்ளார்.

-- பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]