பொது

சீனாவுடன் ஹலால் வர்த்தக கலந்துரையாடல் - மலேசியாவுக்கு புதிய முதலீடுகள்

10/09/2024 05:52 PM

ஷங்காய், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  மலேசியா-சீனா ஹலால் வர்த்தக கலந்துரையாடல் மூலம் சீனாவிலிருந்து சாத்தியமான புதிய முதலீடுகள் மலேசியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் வரலாறும், வளர்ந்து வரும் பொருளாதாரமும், ஹலால் தொழில்துறையின் எதிர்காலம் மற்றும் இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிப்பதற்குச் சிறந்த வாய்ப்பை வழங்குவதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மலேசிய ஹலால் வர்த்தகத் துறையில் பதிவுசெய்யப்பட்ட 625 கோடி ரிங்கிட் மதிப்புள்ள ஏற்றுமதியின் அடிப்படையில், ஹலால் ஏற்றுமதிக்கான முதல் இரண்டு இடங்களில் சீனா இடம்பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"ஹலால் துறையில் கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை மலேசியா மதிக்கிறது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நமது பலத்தை வலுப்படுத்தலாம், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் நமது ஹலால் தயாரிப்புகள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் பயனீட்டாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் கிடைப்பதை உறுதி செய்யலாம்," என்று அவர் கூறினார்.

இன்று, ஷங்காயில் நடைபெற்ற ஹலால் வட்ட மேசை கலந்துரையாடலில், டாக்டர் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

சீனாவின் ஆறு அமைப்புகள் உட்பட, உலகளவில்88 ஹலால் சான்றிதழ் அமைப்புகளை  மலேசியா தற்போது அங்கீகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)