பொது

குரங்கம்மை பரவலைத் தடுக்க பி.கே.பி அமல்படுத்தப்படாது

10/09/2024 06:00 PM

சுங்கை பூலோ, 10 செப்டம்பர் (பெர்னாமா) --  நாட்டில் MPOX எனப்படும் குரங்கம்மை பரவலைத் தடுக்க கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி-யை அமல்படுத்த சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை.

அனைத்துலக நுழைவாயிலில் செயல்பாட்டுத் தர விதிமுறை, எஸ்.ஒ.பி-ஐ அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நிலையில், MPOX கிருமித் தொற்று என்று சந்தேகிக்கப்பட்ட 52 சம்பவங்களும் அந்நோய் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

அனைத்துலக நுழைவாயிலில் சுமார் 62 லட்சம் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவை கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.  

"செயல்பாட்டுத் தர விதிமுறைகளைப் பராமரிக்கவும் அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கி விட்டோம். குறிப்பாக, அனைத்துலக நுழைவாயில்களில் அது தரை, கடல் அல்லது விமான நிலையங்கள் உட்பட. எங்களின் தயார்நிலையைக் குறித்து நீங்கள் கேட்டால் நாங்கள் தயாராக இருக்கிறோம், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி," என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை, சுங்கை பூலோவில் சுகாதார அமைச்சின் பயிற்சி கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் டாக்டர் சுல்கிப்ளி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

2023-ஆம் ஆண்டில் பதிவான ஒன்பது குரங்கம்மை நோய் சம்பவங்கள் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)