அரசியல்

சபா தேர்தல்; நம்பிக்கை கூட்டணி உடனான நிலைப்பாட்டை சாஹிட் மீண்டும் வலியுறுத்தினார்

03/11/2024 05:13 PM

கூச்சிங், 03 நவம்பட் (பெர்னாமா) -- எதிர்வரும் சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி உடனான ஒத்துழைப்பு குறித்த தமது நிலைப்பாட்டை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

அவ்விரு கூட்டணிகளையும் உட்படுத்திய தொகுதி பங்கீடு, ஒன்றோடு ஒன்று ஒத்திருக்காததோடு தத்தம் கட்சிகளின் சின்னங்கள் பயன்படுத்தப்படும் என்று அம்னோ தலைவருமான அவர் உத்தரவாதம் அளித்தார்.

''அதே முறைகளை நாங்கள் இதர கூட்டணிகளுடன் இணைந்து பயன்படுத்துவோம். பேச்சு வார்த்தையை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே வேளையில், அனைத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தலைமைத்துவம் மற்றும் கூட்டணி கட்சி தலைமைத்துவத்துடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, சரவாக் மாநில மேம்பாட்டு திட்ட அமலாக்க விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதேவேளையில், தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணியைப் பிரதிநிதிக்கும் அறிக்கைகள் அக்கூட்டணியின் தலைவர்களிடமிருந்தே வரவேண்டுமே தவிர எந்தவொரு கட்சி தலைவர்களிடமிருந்தும் அல்ல என்று துணைப் பிரதமருமான  அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)