பொது

ஆடவரைக் கடத்தியதாக மூவர் மீது குற்றச்சாட்டு

17/09/2024 05:26 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்தாண்டு செராஸ், கம்போங் முஹிபாவில் உள்ள பிபிஆர் குடியிருப்புப் பகுதியின் கார் நிறுத்துமிடத்தில், ஆடவர் ஒருவரைக் கடத்தியதாக மூன்று வேலையில்லா ஆடவர்கள் மீது இன்று கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது தங்கள் மீதான குற்றத்தை அம்மூவரும் மறுத்து விசாரணைக் கோரினர்.

குற்றம் சாட்டப்பட்ட முஹமட் இசுல் ஹைகல் சைனொடின், சைரென் இட்சுவான் முஹமட் ஹஸ்லின்,  ஹோஸ்னிசாம் ஹம்சா ஆகிய மூவருடன் மேலும் ஓர் ஆடவர் இணைந்து. கடந்தாண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி இரவு மணி 7.30 அளவில், 27 வயதான ஆடவரைக் கடத்தி அவருக்கு கடுமையான காயத்தை விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 367 மற்றும் செக்‌ஷன் 34-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் பத்தாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட அம்மூவருக்கும் ஜாமின் வழங்குவதற்கான அனுமதியை மறுத்த நீதிபதி சித்தி ஷகிரா மொதாருடின், வழக்கின் மறுசெவிமடுப்பை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)