அரசியல்

மக்கோத்தா: இந்தியர்களின் வாக்கு தே.மு-க்கு திரும்பும் - மஇகா நம்பிக்கை

23/09/2024 05:37 PM

குளுவாங், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜோகூரின் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில், அங்குள்ள இந்தியர்களின் சுமார் 80 விழுக்காட்டு வாக்குகள் தேசிய முன்னணி பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஓன் ஹஃபிஸ் கசியின் ழ் உள்ள நிர்வாக செயல்திறனின் அடிப்படையிலும் இந்திய வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதன் மூலமாகவும் தமக்கு இந்நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மஇகா தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

பிரதமர், துணைப் பிரதமர், மாநில முதலமைச்சர் ஆகியோரின் தலையீட்டால் அத்தொகுதியில் உள்ள இந்தியர்களை உட்படுத்திய பல பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளதை டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

''துணைப் பிரதமர் பிரதமரிடம் சில விவகாரங்களைக் கொண்டு சென்றதினால் இரு இடுகாடுகள் பிரச்சனை, ஆலயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் வழி தேடப்பட்டு வருகின்றது,'' என்றார் அவர்.

2008-ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால், மக்கோத்தா தொகுதியின் இந்திய சமூகத்தினர் சுதாரித்துக் கொண்டு தங்களின் ஆதரவை மீண்டும் தேசிய முன்னணிக்கு வழங்கி அதன் வேட்பாளர் சைட் ஹுசேன் சைட் அப்துல்லாவை வெற்றியடைய செய்வார்கள் என்று விக்னேஸ்வரன் எதிர்பார்க்கின்றார்.

''மீண்டும் ஏமார்ந்துபோன சமூகமாக நாம் இருக்க வேண்டாம். தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வெளியில் இருப்பவர்கள் சிரமம் பாராது வந்து வாக்களிப்பு தினத்தன்று உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்,'' என்றார் அவர்.

நேற்றிரவு, மக்கோத்த சட்டமன்ற இந்திய மக்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தொகுதியில் உள்ள மொத்தம் 66,318 வாக்காளர்களில் 7.8 விழுக்காட்டினர் அதாவது 5,170 பேர் இந்தியர்களாவர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]