பொது

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ''இளம் தலைமுறை பேசும் வள்ளுவம்'' போட்டி

29/09/2024 08:08 PM

ஈப்போ, 29 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்றைய தலைமுறைக்கு திருக்குறளின் மகத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் நோக்கத்துடன் ''இளம் தலைமுறை பேசும் வள்ளுவம்'' எனும் போட்டியை பேராக் மாநில சமூக மற்றும் கல்வி மேம்பாட்டு இயக்கம் மிகச் சிறப்பாக ஏற்று நடத்தியது.

திருக்குறளை வாசித்து அதன் பொருளை 30 வினாடிக்குள் ஒப்புவிக்கும் இப்போட்டியில் பேராக் மாநிலத்தில் உள்ள 86 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் இது மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.

பல நாடுகளில் திருக்குறளின் பெருமையறிந்து அதனை மொழியாக்கம் செய்து உலக மக்கள் கற்று வருகின்றனர்.

எனினும், இப்பழக்கம் நம் மாணவர்களிடையே குறைந்து வருவதோடு வாசிக்கும் பழக்கமும் சுணக்கம் கண்டுள்ளது.

அவற்றை கருத்தில் கொண்டு, பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவுடன் முதன்முறையாக இப்போட்டியை ஏற்று நடத்த தங்கள் தரப்பு முனைந்ததாக பேராக் மாநில சமூக மற்றும் கல்வி மேம்பாட்டு இயக்கத்தின் செயலாளர் மணிவண்ணன் கந்தசாமி கூறினார்.

இப்போட்டிக்காக பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமட் 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நேற்று, கிந்தா ஆசிரியர் பயிற்சி கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]