பொது

துப்பாக்கி; தோட்டாக்களை வைத்திருந்த வழக்கு அடுத்தாண்டு விசாரிக்கப்படும்

30/09/2024 06:06 PM

கோலாலம்பூர், 30 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 200 துப்பாக்கி தோட்டாக்களையும் ஆறு துப்பாக்கிகளையும் கொண்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் இஸ்ரேலியப் பிரஜை அவித்தான் ஷாலோமின் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ள கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஜனவரி 6 தொடங்கி 9, 14 தொடங்கி 16 மற்றும் 20 முதல் 23-ஆம் தேதி வரையில், 12 நாட்களுக்கு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி நோரினா சைனோல் அபிடின் தெரிவித்தார்.

அரசு தரப்பு 30 சாட்சிகளை முன்வைக்கவிருப்பதோடு, சாட்சிகளின் அறிக்கைகளை தங்கள் தரப்பு பூர்த்தி செய்யும் செயல்முறையை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர்களான முஹமட் முஸ்தாஃபா பி. குஞ்ஞாலமும் ருசிலா அப்துல் மஜிட்டும் தெரிவித்தனர்.

முன்னதாக, இன்று தொடங்கவிருந்த வழக்கு விசாரணை தேதியை மாற்றுமாறு முஹமட் முஸ்தாஃபா நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையில் 38 வயதான அவித்தானை பிரதிநிதித்து வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிள்ளை ஆஜரானார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]