பொது

AI தொழில்துறை துறை வளர்ச்சியில் பெண்கள்

09/10/2024 06:06 PM

கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- நவம்பரில் தொடங்கப்படும் தேசிய செயற்கை நுண்ணறிவு AI அலுவலகம் (NAIO), பெண்களை மேம்படுத்துவதோடு, தொழில்துறையை ஆதரிப்பதற்குத் துணைபுரியும் AI மேம்பாட்டு முயற்சிகளிலும் அதிக கவனம் செலுத்தும்.

பல்வேறு துறைகளில் பெண்கள் பங்காற்றிவரும் வேளையில், தொழில்நுட்பத் துறையிலும் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு இம்முயற்சி நல்வாய்ப்பாகவும் அமையும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

"பெண்கள் உட்பட அனைவரும், அனைத்துத் துறைகளுக்கும் உதவக்கூடிய சில முன்னெடுப்புகளைக் கண்டறிவதே இந்த அலுவலகத்தின் முதல்கட்ட பணியாகும். எனவே, இந்த தேசிய AI அலுவலகம் நிறுவப்பட்டதும், சிக்கல்களை எதிர்கொள்ள நாம் உருவாக்கப் போகும் கொள்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கலந்துரையாடல் நிகழும் என்று நம்புகிறேன்." என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள பேங்க் நெகரா மலேசியாவில் நடைபெற்ற WIT APAC மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோபிந்த் அவ்வாறு கூறினார்.

மலேசிய பொருளாதார இலக்கவியல் அமைப்பு (MDEC) மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் (WIT) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான பயனுள்ள கொள்கைகளை அரசாங்கம் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது.

முன்னதாக, MDEC தலைமை நிர்வாக அதிகாரி அன்வார் ஃபரிஸ் ஃபாட்சில் மற்றும் WIT மலேசியா நாட்டு இயக்குநர் யூகி ஐஸ்வா ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்த பரிமாற்றத்தை, கோபிந்த் சிங் கண்ணுற்றார்

தொழில்நுட்பக் கல்வியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அவர் கவனம் செலுத்தியதோடு ,WIT-இன் உலகளாவிய தாக்கத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் முக்கியப் பங்காற்றுவது மட்டுமின்றி, சில துறைகளில், முன்னணிப் பாத்திரங்களையும் வகிப்பதை கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)