பொது

ஆசியான்: 'உள்ளடக்கம் & நிலைத்தன்மை' கருப்பொருளில் மலேசியா தலைமை

12/10/2024 05:44 PM

கோலாலம்பூர், 12 அக்டோபர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டில் ஆசியானிற்கு தலைமையேற்கும்போது மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேம்பாட்டில் எந்தவொரு தரப்பும் விடுபடக்கூடாது என்பதை பிரதிபலிக்கும் 'உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை' என்ற கருப்பொருளை மலேசியா தேர்ந்தெடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆசியான் சமூகம் உருவாக்கப்பட்டதோடு, 2045-ஆம் ஆண்டு ஆசியான் சமூக தூரநோக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கும் ஆசியானிற்கு 2025-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான தருணமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஆசியான் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் தொடர மலேசியா அதை வழிநடத்தும்.

அதோடு, 2025-ஆம் ஆண்டில் ASEAN-GCC மற்றும் சீனா உச்சநிலை மாநாட்டை நடத்துவது உட்பட வட்டார பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் விரிவுப்படுத்துவதிலும் மலேசியா கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

44 மற்றும் 45-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, அதன் தொடர்பான உச்சநிலை மாநாடுகளின் நிறைவு விழாவிலும், மலேசியாவிடம் ஆசியான் தலைமைத்துவத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும், 2025-ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக பொறுப்பேற்பதற்கு அன்வார் அதிகாரப்பூர்வமாக மலேசியாவை பிரதிநிதித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)