பொது

மோசமான நிலையில் உள்ள 1,091 பள்ளிகளில் 717 முற்றிலும் நிறைவு

12/10/2024 05:51 PM

கோலாலம்பூர், 12 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் மோசமான நிலையில் உள்ள 1,091 பள்ளிகளின் மேம்பாட்டு திட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 717 முற்றிலும் நிறைவடைந்துள்ளன.

எஞ்சிய 183 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளதோடு, 176, கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளும், 12 திட்டங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டும் வருவதாக கல்வி அமைச்சு, கேபிஎம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திட்ட நோக்கமும் சம்பந்தப்பட்ட தளத்தின் தயார்நிலை பணிக்கான அவசியத்தையும் பொருத்து ஆறு முதல் 35 மாதங்களுக்கு இடையில் இத்திட்டத்தின் அமலாக்க காலக்கட்டம் அமையும் என்று கேபிஎம் தெரிவித்துள்ளது.

2024--ஆம் ஆண்டு வரை, 850 கோடி ரிங்கிட் செலவை உட்படுத்தி 1,091 மேம்பாட்டு திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 339 திட்டங்கள் சபாவிலும், 400 சரவாக்கிலும், 352 தீபகற்ப மலேசியாவிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

மோசமான நிலையில் உள்ள அனைத்து பள்ளிகளின் மேம்பாட்டு திட்டங்களை வலுப்படுத்தும் முயற்சிக்கு, அரசாங்கத் தலைமை செயலாளர் தலைமையில், அரசாங்கம், பொதுத்துறை சீர்திருத்தத்திற்கான சிறப்பு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)