பொது

2025 வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் இன்று தாக்கல் செய்தார்

18/10/2024 08:10 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- 42 ஆயிரத்து 100 கோடி ரிங்கிட் மதிப்பிலான 2025 வரவு செலவுத் திட்டத்தை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று தாக்கல் செய்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சு அல்லது அரசாங்கத்திற்கானது மட்டுமல். மாறாக, நாட்டு மக்கள் மற்றும் மலேசியாவின் நலனுக்கான அடித்தளம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில், 33 ஆயிரத்து 500 கோடி ரிங்கிட் நிர்வகிப்பு செலவிற்கும், எண்ணாயிரத்து 600 கோடி ரிங்கிட் மேம்பாட்டு செலவிற்கும், 200 கோடி ரிங்கிட் எதிர்பாரா செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரலாற்றில் இதுவே மிகவும் அதிகமான வரவு செலவுத் திட்ட தொகையாகும்.

''அரசாங்கம் கட்டம் கட்டமாக நிதி பற்றாக்குறையைக் குறைக்க உறுதி கொண்டிருந்தாலும், தொடர்ந்து விரிவடையும் வரவு செலவுத் திட்டத்தையே நீட்டித்து வருகிறது. 2025 வரவு செலவுத் திட்டம் இது அறிவிக்கப்பட்டதிலேயே மிக அதிக தொகையிலானது ஆகும். இம்முறை 33 ஆயிரத்து 500 கோடி ரிங்கிட் நிர்வகிப்பு செலவிற்கும், 8 ஆயிரத்து 600 கோடி ரிங்கிட் மேம்பாட்டு செலவிற்கும், 200 கோடி ரிங்கிட் எதிர்பாரா செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

மேம்பாட்டு ஒதுக்கீட்டை தவிர்த்து, 900 கோடி ரிங்கிட் மதிப்புடைய பொது-தனியார் ஒத்துழைப்பிலான திட்டம், PFI-யும், இரண்டாயிரத்து 500 கோடி ரிங்கிட் அரசாங்கம் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களின் உள்நாட்டு நேரடி முதலீடும் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்வழி, 2025-ஆம் ஆண்டு மேம்பாட்டிற்கான பொது முதலீடு 12 ஆயிரம் கோடி ரிங்கிட்டாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)