புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் ஊழியர் சேமநிதி வாரியத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டாய பங்களிப்புகள் தொடர்பாக எழுந்திருக்கும் கருத்துக்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்தில் கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான எந்தவொரு முடிவும் நிதியமைச்சால் அறிவிக்கப்படும் என்றும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தோட்டங்களை நிர்வகிக்கும் சில நிறுவனங்களின் கருத்துகள் உட்பட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன (அமைச்சரவைக் கூட்டம்). இந்த கருத்துக்கள் குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவர் கவனத்தில் கொண்டுள்ளார். நிதியமைச்சின் முடிவுக்கு நாம் காத்திருப்போம்,'' என்று அவர் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களை பிரதிநிதித்து, அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவிருக்கும் மலேசிய இந்தியர்களுக்கு ஃபஹ்மி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
"அரசாங்க சார்பில், தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"," என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)