பொது

ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

25/10/2024 06:41 PM

கிள்ளான், 25 அக்டோபர் (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில் ஒரு வர்த்தகரின் வீட்டில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட ஐவர் இன்று கிள்ளான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர்.

நீதிபதி ஷாரிஃபா முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 23 முதல் 38 வயதுக்குட்பட்ட எம். லிங்கேஸ்வரன், பி.எஸ். தமிழ் குமரன், ஜி. சிவா, ஆர்.தமிழரசன், எஸ். நாகேன் ஆகியோர் அந்த வாக்குமூலத்தை அளித்தனர்.

குழுவாக இணைந்து பாராங் கத்தியைப் பயன்படுத்தி, உள்நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 74,500 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு சிலைகளைக் கொள்ளையடித்ததாக அவர்கள் அனைவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அக்டோபர் 3ஆம் தேதி, கிள்ளான் துறைமுகத்தில் உள்ள பண்டாமாரான் வீடமைப்பு பகுதியில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395/397-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும், நாளொன்றுக்கு 30 லிருந்து 2,000 ரிங்கிட் வரையில் வருமானம் பெறும் பாதுகாவலர், லாரி ஓட்டுநரின் உதவியாளர், பொருட்கள் அனுப்பும் சேவை ஆகிய தொழிலைப் புரிகின்றனர்.

மேலும், தமிழ் குமரன் மாற்றுத்திறனாளி அட்டை கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் சாட்சியைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன் அவர்கள் ஒவ்வொருவரையும் தலா 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)