உலகம்

இஸ்ரேலின் முற்றுகை மோசமடைந்தால் காசா புற்றுநோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்

03/12/2024 05:01 PM

காசா, 03 டிசம்பர் (பெர்னாமா) -- இராணுவ மோதல்கள் மோசமடைந்து இஸ்ரேலின் முற்றுகை நடவடிக்கை தீவிரமடைவதால் காசா பகுதியில் உள்ள புற்றுநோயாளிகள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் சுகாதார அமைப்பும் சரிவின் விளிம்பில் உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைவதற்கு முன்பே காசா பகுதியில் சுகாதார வசதிகள் பற்றாக்குறையினால் புற்றுநோய் நோயாளிகளுக்கான மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

பல நோயாளிகள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிகிச்சைக்காக காசாவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு மாறிச் செல்ல நம்பியிருந்தனர்.

எனினும், 2023ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட மோதலிலிருந்து இஸ்ரேலின் தீவிரமான முற்றுகையினால் ஏற்கனவே பலவீனமாக இருந்த இச்சேவை முற்றிலுமாக முடக்கம் கண்டது.

ஆகஸ்ட்டில் உலக சுகாதார நிறுவனம், WHO வெளியிட்ட தரவுகளின்படி மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 5,000 நோயாளிகள் ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு காசாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 10,000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகள் காசாவில் சிக்கித் தவிப்பதோடு இடமாற்றங்களுக்காகவும் காத்திருக்கின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]