கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) -- 13-ஆவது மலேசியத் திட்டத்தில், நாட்டிலுள்ள இந்தியர்களின் மேம்பாட்டு வியூக செயல்திட்டத்தை உருவாக்குமாறு மலேசிய படைப்பாற்றல் பட்டதாரிகள் சங்கம், மைகா அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளது.
அண்மையில் ஒன்பது மாநிலங்களில் உள்ள 300 அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பரிந்துரைக்கப்பட்ட 10 அம்சங்களில் அதுவும் அடங்கும் என்று அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே. ரமணி கிருஷ்ணன் தெரிவித்தார்.
''இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு, என்ன செய்தால் மாற்றத்திற்கான வழி ஏற்படும் போன்றவைக் குறித்த கருத்துகள் சேகரித்தப் பின்னர், அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்த 13ஆவது மலேசியத் திட்டம்,'' என்றார் அவர்.
அண்மையில், 13-ஆவது மலேசியத் திட்டம் குறித்து அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்களின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததாக ரமணி கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நாட்டில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியர்களுக்கு உதவ இச்செயல் திட்டம் அவசியம் என்றும் அவர் கூறினார்.
''இதன் அடிப்படையில் பிரச்சனைகள், அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள், அதற்கான ஒதுக்கீடுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்காமல் ஒட்டுமொத்த அளவில் ஒரு முழுமையான வியூக அடிப்படையிலேயே செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த சமுதாயத்திற்கு விரைவான ஒரு தூரநோக்கு அடிப்படையில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் உறுதியாக உள்ளோம்,'' என்று ரமணி கிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள மேம்பாட்டு திட்டத்தில் நேரடியாக அரசாங்க சார்பற்ற அமைப்பை உட்படுத்தி பிரதமர் துறை அலுவலகத்தில் உயர்மட்ட அளவிலான தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவும் அச்சங்கம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
இன்று, கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள டான் ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)