உலகம்

மொன்டெநெக்ரோவில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்; இரு சிறார் உட்பட பத்து பேர் பலி

02/01/2025 03:55 PM

செடின்ஜே, 02 ஜனவரி (பெர்னாமா) -- மொன்டெநெக்ரோ, செடின்ஜே நகரில் ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது பத்து பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அந்நாட்டில் நடந்த மிகப்பெரிய மோசமான துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களில் ஒன்றாகும்.

ஆவ்வாடவர், அந்நகரில் உள்ள உணவகம் ஒன்றினுள் தாக்குதலை நடத்தியப் பின்னர் அதன் வெளியிலும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக உணவகத்தினுள் ஏற்பட்ட சண்டையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், அந்த ஆடவர் உணவகத்தை விட்டு வெளியேறி வீதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

போலீசாரும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரும் சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் சந்தேக நபர் மது அருந்தியிருக்கலாம் என்று கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவம் என்று குறிப்பிட்ட மொன்டெநெக்ரோ பிரதமர் மிலோஜ்கா ஸ்பாஜிக் அந்நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]