உலகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி நுழைந்த கனரக வாகனம்; 15 பேர் பலி

02/01/2025 06:16 PM

நியூ ஓர்லீன்ஸ், 02 ஜனவரி (பெர்னாமா) -- புத்தாண்டு தினத்தில் தமது கனரக வாகனத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பொறுத்திய ஓய்வுப் பெற்ற அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் நியூ ஓர்லீன்ஸ் பகுதியில் போடப்பட்டிருந்த தற்காலிக தடைகளை மீறி நுழைந்து அங்கிருந்த மக்களை மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் 30-கும் மேற்பட்டோர் காயத்திற்கு ஆளாகினர்.

மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் வெடிப் பொருள்களை வைத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமலாக்கத் தரப்பினர் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான கெனல் மற்றும் பொர்பன் வீதிகளில் உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 3.15-க்கு நடந்த இத்தாக்குதலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைந்திருந்த குறைந்தது 35 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களை மோதித் தள்ளிய, அமெரிக்கரான 42 வயதுடைய ஷம்சுட்-டின் ஜபார் எனும் அந்நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து போலீசார் அவரை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரத் தரப்பு கூறியது.

French Quarter-இல், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் வெடிகுண்டு சாதனத்தை வைப்பதை கண்காணிப்பு காணொளியில் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒவ்வோர் புத்தாண்டின்போது நியூ ஓர்லீன்சில் நடத்தப்படும் Sugar Bowl எனப்படும் காற்பந்து போட்டியையும் அமலாக்கத் தரப்பினர் 24 மணி நேரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அப்பகுதியில், சுமார் 400 அதிகாரிகள் பணியில் உள்ளனர்.

இதனிடையே, இது ஒரு பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்று கூட்டரசு புலனாய்வுப் பிரிவு, FBI குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]