ஒடிசா, 11 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை, இந்தியா, ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மஇகா-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டான் ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் மலேசியாவின் இருவழி உறவை மேம்படுத்துவது உட்பட நாட்டு மக்களின் நலனுக்காக ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, பிரவாசி பாரதிய சம்மான் விருது நேற்று வழங்கப்பட்டது.
2008 முதல் 2018-ஆம் ஆண்டு வரையில், மலேசியாவின் மனிதவள அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் சேவையாற்றிய டாக்டர் எஸ். சுப்ரமணியம், மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சிகளைச் செயல்படுத்தியதில் முக்கிய வங்கு வகித்துள்ளார்.
பொது சேவை மற்றும் அரசியல் ஆகிய துறைகளில், தமது நீண்ட கால சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட இவ்விருது, உலகளாவிய, குறிப்பாக மலேசியாவில் இருக்கக் கூடிய இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்று சுப்ரமணியம் கூறினார்.
''இந்த விருதானது நிச்சயமாக ஒரு நிலையிலே எனக்கு மனநிறைவைக் கொடுத்திருந்தாலும், இது தனிப்பட்ட முறையில் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம். அதே சமயத்தில், மலேசியா வாழ் இந்தியர்களுக்கும் என்னுடைய நீண்ட நாள் பொது சேவைக்கும் ஓர் அங்கீகாரமாக இருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்,'' என்று கூறினார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் இந்தியர்கள் தமது பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரம், சமயம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகளையும் சேவையையும் செய்து வருகின்றனர்.
அத்தகைய சேவையை அங்கீகரித்து வழங்கப்படும் இதுபோன்ற விருதுகள் அவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைவதோடு, மேலும் தமது சேவைகளை செவ்வனே செய்வதற்கு உந்துதலாக அமையும் என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
''பரவலாக இருக்கக்கூடிய இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் இருக்கக்கூடிய ஓர் உறவு மிகவும் முக்கியமான ஓர் உறவு. ஏனென்றால், இந்திய வம்சாவளி பரவலாக இருக்கக்கூடியவர்களுக்கு ஏராளமான ஆற்றல் இருக்கின்றது, அறிவாற்றல் இருக்கின்றது, நுட்பமான துறைகளிலே நுணுக்க அறிவும் இருக்கின்றது. தற்போது பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சியும் இருக்கின்றது,'' என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இம்முறை பல நாடுகளைச் சேர்ந்த 27 பேருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது பெயரை முன்மொழிந்த மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு டாக்டர் சுப்ரமணியம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)