லாஸ் ஏஞ்சலஸ், 11 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வரலாறு காணாத காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் பொட்டு, தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களில் லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
காட்டுத்தீயால் எரிந்து சேதமடைந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் கொள்ளையர்கள் நுழைவதைத் தடுப்பதே ஊரடங்கின் நோக்கமாகும் என்று லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் தலைவர் ஜிம் மெக்டோனல் கூறினார்.
"ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், கொள்ளையர்களைத் தடுக்க உதவும் ஒரு முக்கியமான கருவியாகும். இந்த முயற்சி, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருளில் செயல்படும் பொதுப் பாதுகாப்புப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது," என்று அவர் கூறினார்,
மாலை மணி 6 தொடங்கி காலை மணி 6-வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி 7-ஆம் தேதி முதல் கலிபோர்னியா சுற்றுவட்டாரங்களில் உள்ள நகரங்களை ஒரே நேரத்தில் ஆறு காட்டுத்தீ சம்பவங்கள் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)