பொது

கையூட்டு கேட்டு பெற்ற மூவருக்கு இன்று தொடங்கி ஆறு நாள்களுக்குத் தடுப்பு காவல்

21/01/2025 05:23 PM

சிரம்பான், 21 ஜனவரி (பெர்னாமா) -- விண்ணப்பம் செய்த ஒப்புதலை எளிய முறையில் பெற்று தர உதவுவதாக கூறி முதலீட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து 6 லட்சம் ரிங்கிட்டைக் கையூட்டாகக் கேட்டு பெற்ற அரசாங்க நிறுவனத்தின் துணை இயக்குனர் உட்பட மேலும் இருவருக்கு இன்று தொடங்கி ஆறு நாள்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று, சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்,எஸ்பிஆர்எம் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து அவர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் சைட் ஃபரித் சைட் அலி பிறப்பித்தார்.

நெகிரி செம்பிலானில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்தில், நேற்று மாலை 5.30 மணியளவில் விளக்கமளிக்க வந்தபோது அந்த இரண்டு சந்தேக ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அச்சந்தேக நபர்கள் இருவரும் மத்தியஸ்தராக செயல்பட்டு நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கின் மூலம் பணம் பரிமாற்றம் செய்து கையூட்டுத் தொகையைப் பெற்றதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே, கைது நடவடிக்கை குறித்து நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம் இயக்குநர் அவ்கோக் அஹ்மத் தௌபிக் புத்ரா அவ்க் இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டபோது அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம், செக்‌ஷன் 17 உட்பிரிவு எ-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)