கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- இவ்வாண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் 2024ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை " ஏ.ஐ உருவாக்கியது" என்று குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
மோசடி, அவதூறு பரப்புதல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய, குறிப்பாக சமூக ஊடகங்களில் ஏ.ஐ-யின் தவறான பயன்பாட்டைத் தடுக்க இந்நடவடிக்கை முக்கியமானது என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
பல சமூக ஊடக தளங்கள் தன்னார்வ முறையில் ஏ.ஐ உள்ளடக்கத்தைக் குறிப்பிடுவதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த முயற்சி, ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மூலம், வட்டார அளவில் விரிவுபடுத்தப்படும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"அதேவேளையில், அக்டோபரில் நடைபெறவிருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், சமூக வலைத்தள பயன்பாடு குறித்த கோலாலம்பூர் பிரகடனம் ஒன்று முன்மொழியப்பட்டு, ஆசியான் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. இது, அனைத்து ஆசியான் நாடுகளுக்கும், குறிப்பாக சமூக ஊடகங்களில், ஏ.ஐ மாற்றங்களை எதிர்கொள்ளவும் கையாளவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியான வியூக உத்திகளைக் கடைப்பிடிக்க வாய்ப்பளிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஏ.ஐ உருவாக்கிய போலி காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பரவுவது தொடர்பான வருத்தம் குறித்து கருத்து தெரிவித்த அவர், உலக அளவில் இதுவரை திருப்திகரமான கண்காணிப்பு வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)