கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடும் கும்பலின் முக்கிய நபர்களாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் இருவரை இன்று அதிகாலை கோலாலம்பூர் செராஸ்சில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அதிகாலை மணி 3.45 அளவில் போலீசார் சோதனை மேற்கொள்வதற்கு முன்னதாக, அவ்விரண்டு சந்தேக நபர்களும் திருடும் நடவடிக்கையில் ஈடுபட புதிய இடங்களை அடையாளம் கண்டிருந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
''2023-ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் திருடப்பட்ட வாகனமாக நம்பப்படும் வெள்ளை நிற ஹோண்டா சிவிக் காரை அவர்கள் ஓட்டிச் சென்றனர். நாங்கள் அவர்களைத் துரத்தினோம். துப்பாக்கி சூடு நிகழ்ந்தது. அதனால் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபாடில் அவ்வாறு கூறினார்.
இச்சம்பவத்தில், அவர் பயணித்த வாகனத்தில் இருந்து கொள்ளை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான கருவிகள், போதைப்பொருள், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு அரை தானியங்கி துப்பாக்கி ஆகியவற்றையும் தமது குழுவினர் கண்டெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
2022-ஆம் ஆண்டு தொடங்கி இவ்விருவரும் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஃபாடில் விவரித்தார்.
''இதுவரை, உடல் பரிசோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை, அவர்கள் நீண்ட காலமாக இங்கு வசித்து வரும் வெளிநாட்டினர். கடப்பிதழ் இல்லாமல், தங்கள் குழுவுடன் இங்கே வசித்து வந்தனர். 2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்கள் நீண்ட காலமாக நடவடிக்கைகளை (குற்றச்செயல்கள்) மேற்கொண்டு வந்தனர்,'' என்று அவர் விளக்கினார்.
இந்த கும்பல் கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேராக் உள்ளிட்ட பல மாநிலங்களில் குற்றச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
இக்குழுவில் சுமார் 15 உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும், மீதமுள்ள குழு உறுப்பினர்களை போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருவதாகவும் ஃபாடில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)