புக்கிட் ஜாலில், ஜூலை 26 (பெர்னாமா) -- டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான மோதலின் அண்மைய நிலவரங்களை வெளியுறவு அமைச்சு வழி அரசாங்கம் துல்லியமாகக் கண்காணித்து வருகிறது.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள அந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மலேசியாவின் திட்டங்களில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
''இந்த நிலைமை (மோதல்) குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்பது உண்மைதான். ஆனால் பிரதமர் அன்வார் இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டது. நிச்சயமாக நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மேலும் டிசம்பரில் சீ விளையாட்டுப் போட்டி உள்ளதை நாங்கள் அறிவோம். இந்த விவகாரம் இணக்கமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, புக்கிட் ஜாலில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய அளவிலான தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த பின்னர், ஹன்னா யோ செய்தியாளர்களிடம் பேசினார்.
இப்போட்டியில் இடம் பெற்ற சிலாட், வுஷு, கராத்தே, முவே தாய் மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் நாடு முழுவதிலுமிருந்து 2,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)