பிரேசிலியா, 08 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரேசில், பிரேசிலியாவில் நடைபெற்ற 17-வது உலக வுஷூ வெற்றியாளர் தொடரின் இறுதி நாளில், நாட்டின் தேசிய வுஷூ அணி ஐந்தாவது தங்கத்தை வென்று, சிறந்த சாதனையுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.
டுலியன் பிரிவில் போட்டியிட்ட, நாட்டின் மகளிர் மூவர் தங்கப் பதக்கம் வென்றனர்.
தேசிய வீராங்கனைகளான தான் தான் சியோங் மின், லீ ஜியா ரோங் மற்றும் பாங் புய் ஈ ஆகிய மூவரும் தாங்கள் களம் கண்ட இறுதி போட்டியில், 9.630 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை கைப்பற்றினர்.
அவர்களை அடுத்து, 9.623 என்ற புள்ளிகளில், ஹங்கோங் இரண்டாம் இடத்தை வென்றது.
இதனிடையே, ஆடவர் பிரிவில், பங்கேற்ற மலேசியாவின் கிளமென் திங் சு வெய், சி ஷி பெங் மற்றும் பிரையன் தி காய் ஜி ஆகியோர் 9.613 புள்ளிகளில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
முதல் இடத்தை மகாவ் வென்ற வேளையில், இரண்டாம் இடத்தை ஹங்கோங் பிடித்தது. ஒட்டுமொத்தமாக, மலேசியா ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)