புக்கிட் மெர்தாஜாம், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- சாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்த விசாரணை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் அவதூறான மற்றும் நீதிமன்றத்திற்கு உட்பட்ட அறிக்கைகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி கண்காணிக்கும்.
சபா, கோத்தா கினாபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாராவின் விசாரணை செயல்முறையை அரசாங்கம் மதிப்பதால் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் எந்தவோர் அறிக்கையும் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.
சாராவின் மரண விசாரணை குறித்து போலி அறிக்கைகளை வெளியிட்ட ஒரு நபருக்கு எதிராக காரணத்தை விளக்கும்படியான அறிவிக்கையை தேசிய சட்ட துறை அலுவலகம் வெளியிட்டுள்ளதாகவும், அதனை புறக்கணித்தால் நீதிமன்றத்தை அவமதித்தற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் டத்தோ ஃபஹ்மி கூறினார்.
''இது நீதிமன்றத்தின் செயல்முறை. குறிப்பிட விரும்பும் எந்தவொரு கருத்தும், சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் அல்லது மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் உண்மையாக இருக்க வேண்டும். உண்மைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது மிகைப்படுத்திக் கூறும் அல்லது செயல்முறையைச் சீர்குலைக்கும் முயற்சிக்கான எந்தவோர் அறிக்கை வெளியிடப்பட்டால். அரசாங்கத்தின் தரப்பில் நாங்கள் செயல்முறையை மதிக்கின்றோம். மேலும், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இருக்கின்றன. அண்மையில் விசாரணை செயல்முறை தொடர்பாக அவதூறான அறிக்கைகளை வெளியிட்ட ஒரு நபருக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே, அந்த நபருக்கு அறிவிக்கை வழங்கப்பட்டது,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், குபாங் செமாங்கில் உள்ள எஸ்.எச் பிஸ்தாரி பேரங்காடியில், SARA திட்ட அமலாக்கத்தை பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
"Justice for Zara” எனும் ஒற்றுமை பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று சாரா குடும்பத்தினரின் கோரிக்கையையும் ஃபஹ்மி கவனத்தில் கொள்வதாக கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]