புக்கிட் மெர்தாஜாம், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- ஊதிய உயர்வுக்குப் பின்னர் உதவிகள் பெற தகுதி அற்றவர்கள் உள்ளதால் ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர்-க்கான நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் பரிந்துரைத்துள்ளார்.
ஊதியம் அதிகரித்தாலும் அவர்களில் சிலருக்கு தொடர்ந்து உதவிகள் தேவைப்படுவதை ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
''மேலும், சிலர் முன்பு எஸ்.டி.ஆர் உதவியைப் பெற்றவர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். ஆனால், அவர்கள் வேலை செய்து, ஊதிய உயர்வு பெற்றிருந்தால் அதனை ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சருக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்,'' என்றார் அவர்.
தற்போது எழும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும்போது சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசாங்கம் அடிமட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியும் என்று டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.
மற்றொரு நிலவரத்தில், ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாரா (SARA) செயல்பாடு குறித்த அண்மைய முன்னேற்றங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்படி நிதி அமைச்சிடம் தாம் அறிவுறுத்தவிருப்பதாக ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இத்திட்டம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறுவதாகவும், நாள் ஒன்றுக்கு சுமார் 150-இல் இருந்து 200 பேர் எவ்வித பிரச்சனைகளுமின்றி தங்களின் அடிப்படை பொருள்களை வாங்குவதை ஆரம்பக்கட்ட தரவுகள் காட்டுவதாகவும் அவர் விவரித்தார்.
''அண்மைய தகவல்கள் குறித்து அமைச்சரவை அறிவிக்கவில்லை. ஓர் அறிக்கையை வெளியிடும்படி நான் நிதி அமைச்சைக் கேட்கவிருக்கிறேன். ஆனால், முதல் வாரத்தில் கிடைத்த தொகை மிகவும் நேர்மறையானது என்பதை நாம் அறிவோம். மேலும், தொடக்கக்கட்டப் பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளன. அமைப்பில் எந்தவோர் இடையூறும் இல்லை. அந்த அமைப்பு சீராகச் செயல்படுவதை நான் முன்னதாக கண்டேன். எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, மிகவும் சிறப்பாக உள்ளது,'' என்றார் அவர்.
இதனிடையே, சாரா அமைப்பு எவ்வித இடையூறுகளுமின்றி சீராக இயங்குவதாகவும் தொடக்கக் கட்ட சிக்கல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]