Ad Banner
Ad Banner
 பொது

8 வயது சிறுமி கொலை; தாய் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

03/04/2026 07:00 PM

தைப்பிங், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த வாரம், எட்டு வயது ஒன்பது மாதங்களான சிறுமியைக் கொலை செய்ததாக, தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், இன்று, தைப்பிங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

28 வயதான M. சாவித்ரி, உயிரிழந்த சிறுமியின் மாற்றான் தந்தை 27 வயதான M. சதிஸ்குமார், அவளின் மாற்றான் தாத்தா பாட்டியான 49 வயதான M. முரளி மற்றும் 53 வயதான எஸ்.சி. வீரலெட்சுமி ஆகிய நால்வரும் மஜிஸ்திரேட் ஆர். பிரபாகரன் முன்னிலையில் தனித்தனியே வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக தலையசைத்தனர்.

எனினும், கொலை வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி காலை, லாருட் மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் உள்ள தாமான் சுங்கை மாசில் உள்ள வீடொன்றில் தனவித்தா என்றறியப்படும் அச்சிறுமியை ஒன்றாக இணைந்து கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-உடன் வாசிக்கப்பட்ட அதேச் சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மரணத் தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

மரபணு, தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக் காத்திருப்பதால் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]