இஸ்லாமாபாத், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் நிலையற்ற போர் நிறுத்தத்திற்கு மத்தியில், அவ்விரு நாடுகளும் நாளை முதல் இஸ்லாமாபாத்தில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதால் தற்போது உலக நாடுகளின் கவனம் பாகிஸ்தான் மீது திரும்பியுள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இன்று இஸ்லாமாபாத் வரவிருப்பதால், தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பரவலாகப் பேசப்படும் இப்பேச்சுவார்த்தைகளுக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இரு தரப்பிலிருந்தும் சிக்கலான கோரிக்கைகள் இருப்பதால், நிச்சயமாக இந்த பேச்சுவார்த்தைகள் எளிதாக அமையாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிப்பதால், இரு தரப்பும் ஒரு சமரசத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
39 நாள்களாக நீடித்த போர், 14 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)