கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளை விரிவாக ஆய்வு செய்வதற்காக Road to Gold, ஆர்.டி.ஜி திட்டத்திற்கான சந்திப்புக் கூட்டம் வரும் மே மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.டி.ஜி-யின் இலக்கு மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்வது தொடர்பில் அக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.
''நாங்கள் புதிய கே.எஸ்.யூ-வை மாற்றியதற்கான காரணத்தில் நிச்சயமாக சில மாற்றங்கள் உள்ளன. எனவே, புதிய கே.எஸ்.யூ-வும் ஆர்.டி.ஜி Road to Gold குழுவில் இடம்பெறும். மேலும் அனைத்து மாற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவென்பதை 5-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் அறிவிப்போம்,'' என்றார் அவர்.
அத்திட்டத்தின் புதிய உத்திகளைச் செயல்படுத்துதல் அல்லது கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட எந்தவொரு முடிவுகளும் கூட்டம் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்று டாக்டர் முஹமட் தௌஃபி கூறினார்.
அனைத்துலக அரங்கில் தேசிய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதில் ஆர்.டி.ஜி தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கை வகிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
உலக அளவில் மலேசியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் ஆர்.டி.ஜி என்பது அரசாங்கத்தின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]