செத்தியா அலாம், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- சிலாங்கூர், செத்தியா அலாமில் உள்ள செம்பனைத் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள மூன்று சட்டவிரோத கிராமங்களில் 214 சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்தச் சட்டவிரோதக் குடியிருப்புப் பகுதியில், நேற்றிரவு மலேசிய குடிநுழைவுத்துறை, ஜே.ஐ.எம், அரச மலேசியா போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் மற்றும் பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மேற்கொண்ட ஒருங்கிணைந்த மாபெரும் சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கள் தரப்பு ஒரு மாதமாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இந்தச் சட்டவிரோதக் குடியிருப்பு கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் ஜே.ஐ.எம் இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
''நன்கு கவனித்தால், இந்த வீடுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இடப்புறமோ வலப்புறமோ எந்தக் கட்டுமானப் பணியும் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மின்சாரமும் தண்ணீரும் இருக்கிறது,'' என்றார் அவர்.
ஒருங்கிணைந்த நடவடிக்கையில், தங்கள் தரப்பு 356 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தியதோடு, சட்டவிரோத குடியேறிகள் என சந்தேகிக்கப்படும் 214 பேரைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில், இந்தோனேசியா, மியன்மார், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]