Ad Banner
Ad Banner
 பொது

இந்து ஆலயங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக தேசிய கோவில் கருத்தரங்கு

11/04/2026 04:22 PM

பத்துமலை, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியாவில் உள்ள பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக சந்தித்து வரும் நிலம் உட்பட சட்ட ரீதியான சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன், இன்று, சிலாங்கூர் பத்துமலையில் தேசிய கோவில் கருத்தரங்கு நடைபெற்றது.

நில உரிமை சிக்கல்கள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் முறையான ஆலய நிர்வாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்திய இக்கருத்தரங்கு, தேசிய நிலக் குறியீடு, நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தது.

மலாயாப் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் நடவடிக்கை குழு, கியூமிக் (CUMIG) மற்றும் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில், மஹிமா (MAHIMA) எனப்படும் மலேசிய இந்து ஆலயம் - இந்து அமைப்புகளின் பேரவை  இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

மலேசியாவில், முறையான ஆவணங்கள் அல்லது ஒப்புதல் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல இந்து ஆலயங்களுக்கு, அதன் நிலம் தொடர்பான பிரச்சனைகள் ஓர் உணர்வுப்பூர்வமான மற்றும் தொடர்ச்சியான கவலையாக இருந்து வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் இன்னும் முறையான நிலப்பட்டா அல்லது சட்டப் பாதுகாப்பு இல்லாத நிலங்களில் இயங்கி வரும் நிலையில், மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாக அவை இடமாற்றம் செய்யப்படுவதற்கோ அல்லது இடிக்கப்படுவதற்கோ ஆளாகின்றன.

இக்கருத்தரங்கின் மூலம், சட்ட நடைமுறைகள், நிலப் பதிவு, ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமலாக்கத் தரப்பினரின் தேவைகள் குறித்து ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக மஹிமா தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, பிரதமர் துறையின் கீழ் நேரடியாகச் செயற்குழு ஒன்றை உருவாக்குவதற்கும் தங்கள் தரப்பு முயற்சித்து வருவதாக சிவகுமார் கூறினார். 

இதனிடையே, பல இந்து ஆலயங்கள் ஆவணத் தேவைகள் குறித்து பரிச்சயம் இல்லாததால், விழிப்புணர்வின்மை முக்கிய சவால்களில் ஒன்றாக நீடிப்பதை கருத்தில் கொண்டு, சட்ட நிபுணர்கள் உட்பட கட்டிடக்கலை நிபுணர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டதாக கியூமிக் தலைவர் தனசேகர் ராமசாமி குறிப்பிட்டார்.

இன்று, சிலாங்கூர், பத்துமலை ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]