Ad Banner
Ad Banner
 பொது

பெருநிறுவன முறைகேட்டில் எஸ்.பி.ஆர்.எம் ஈடுபட்ட ஆதாரமில்லை - போலீஸ்

10/04/2026 05:19 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- பெருநிறுவன முறைகேட்டில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் ஈடுபட்டதற்கான எந்தவோர் ஆதாரமும் இதுவரை இல்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எஸ்.பி.ஆர்.எம்-ஐ உட்படுத்திய எந்தவோர் ஆதாரத்தையும் தமது தரப்பு கண்டறியவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். 

எனினும், முன்னதாக உத்தரவிட்டபடி, அவ்விவகாரம் தொடர்பிலான விசாரணை தொடரப்படும் என்று அவர் கூறினார். 

மேலும், இது குறித்து உள்நாடு உட்பட வெளிநாட்டில் இருப்பவர்கள் சிலரின் வாக்குமூலங்களையும் தமது தரப்பு பதிவு செய்ய வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

''இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு வரம்புகள் இருக்க வேண்டும். நாம் அவர்களை அழைக்கலாம். ஆனால் அதுதான். ஒரு நாட்டை இதில் சம்பந்தப்படுத்தும்போது, ​​இதற்கு அரசாங்கங்களுக்கு இடையிலும் (அரசாங்கத்திற்கு அரசாங்கத்திற்கும் இடையில்) மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

நிறுவனங்களைக் கைப்பற்றும் பொருட்டு தொழிலதிபர்களின் வலையமைப்பால் திட்டமிடப்பட்ட சதி ஒன்றில் எஸ்.பி.ஆர்.எம் -இன் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முன்னதாக ப்ளூம்பெர்க்  நிறுவனம் தெரிவித்திருந்தது.  

இதனிடையே, கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட 'Op Hazard 3.0' ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் மூலம், 58 கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகளின் இறுதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக Datuk Seri Mohd Khalid கூறினார்.

அதோடு, பல்வேறு குற்றங்களுக்காக 16-இல் இருந்து 70 வயதிற்குட்பட்ட 515 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் விளைவாக, 11 மாநிலங்களை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 110 சோதனைகளில், மின்னணுக் கழிவுகளைப் பதப்படுத்தும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்ட, 42 சட்டவிரோதத் தொழிற்சாலை கண்டறியப்பட்டன.

''நிறுவனங்களுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, சட்ட விதிகளின் கீழ் தண்டனைத் தீர்ப்புகளை அதிகப்படுத்தும் விரிவான நடவடிக்கைகளின் மூலம், அந்தக் கும்பலின் குற்ற வலையமைப்பை வெற்றிகரமாக முடக்கியுள்ளது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று, புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)