புத்ராஜெயா, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் தற்போதைய மருந்துகள் கையிருப்பு, குறைந்தபட்சம் ஜூன் மாதம் வரை நிலையாகவும் போதுமானதாகவும் உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் மோதல் தொடர்ந்தால், போதுமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமது தரப்பு நடுத்தர மற்றும் நீண்ட கால உத்திகளை வகுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்தார்.
''தற்போதைக்கு, அதிகம் பீதியடைய வேண்டாம். எங்களிடம் பல்வேறு வழிகள் இருப்பதால், இது அனைவருக்கும் தெரிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மேலும், தொழில்துறையினரிடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடுகிறோம். எனவே, அத்தியாவசிய மருந்துகள், இன்சுலின், தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், அவை அத்தியாவசியத் தேவையாக என்பதால், அந்தப் பொருள்கள் அனைத்தைப் பற்றிய தரவுகளும் பகிரப்பட வேண்டும். ஆகவே, யாரும் அத்தியாவசிய மருந்துகள், முக்கிய மருந்துப் பொருள்கள் போன்றவற்றின் பற்றாக்குறைக்கு ஆளாக மாட்டார்கள்.'' என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை புத்ராஜயாவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய உலக செவித்திறன் தினத்தில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் சுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
போக்குவரத்துச் செலவுகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் மருந்துகளின் விலை 30 முதல் 40 விழுக்காடு வரையிலும், மருத்துவ உபகரணங்களின் விலை 50 முதல் 100 விழுக்காடு வரையிலும் உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைமை நாட்டின் சுகாதார சேவையின் தரத்தைப் பாதிக்காது என்றும், விநியோகத் தடை ஏற்பட்டால் அதனைச்சமாளிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)