கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- சிறுவன் ஒருவனுக்கு எதிராக உடல்ரீதியான மற்றும் உடல்ரீதியற்ற பாலியல் வன்கொடுமை உட்பட, அவனிடம் இயற்கைக்கு மாறான இணைவைக் கொண்டதாக, சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை சிறார்கள் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் பதின்ம வயது நபர், இன்று செலாயாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளான்.
மஜிஸ்திரேட் மஹ்மூடா வி.எம் அப்துல் லத்திஃப் முன்னிலையில், அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் வாசிக்கப்பட்டப் பின்னர், 17 வயதான அந்த பதின்ம வயது நபர் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் இன்று ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி, பத்து கேவ்சில் உள்ள, அமைப்பு ஒன்றின் சிறார்கள் பராமரிப்பு மையத்தில் 10 வயது ஐந்து மாதங்களான சிறுவன் ஒருவனிடம் அக்குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகளுக்கும் குறையாத, 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும், குற்றவியல் சட்டம் செக்ஷன் 377C-இன் கீழ் முதல் குற்றம் விசாரிக்கப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் செக்ஷன் 14(b)-இன் கீழ் இரண்டாவது குற்றம் விசாரிக்கப்படுகிறது.
அதேச் சட்டம், செக்ஷன் 15 (a) (i) dan 15 (a) (ii)-இன் கீழ் மேலும் இரு குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 6,500 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த மஜிஸ்திரேட், ஆவண சமர்ப்பிப்பிற்காக இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]