Ad Banner
Ad Banner
 பொது

மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை விரைவுபடுத்த எஸ்.ஏ.பி இயக்கமுறை

10/04/2026 06:28 PM

புத்ராஜெயா, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலால் உருவான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க, குறிப்பாக அதன் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்குச் சுகாதார அமைச்சு, எஸ்.ஏ.பி எனும் சிறப்பு அணுகல் வழி இயக்கமுறையை அமல்படுத்தும்.

எஸ்.ஏ.பி என்பது, தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கடுமையான மதிப்பீட்டிற்கு உட்பட்டு இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படாத உபகரணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஓர் இடைக்கால அணுகுமுறையாகும் என்று சுகாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

''ஆம், சிறப்பு அணுகல் இயக்கமுறையானது, உபகரணங்களின் விநியோகத்தை விரைவுபடுத்த எங்களுக்கு உதவுகிறது. அந்த உபகரணங்கள் பொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது வடிகுழாய்கள், ஊசிகள், கையுறைகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களாக இருந்தாலும் சரி, தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவுகிறது. ஆம், சிறப்பு அணுகல் வழிமுறையைப் பெறுவதற்காக, இந்த இயக்கமுறையை விரைவுபடுத்த நாங்கள் அனுமதிப்போம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த எஸ்.ஏ.பி இயக்கமுறை தற்காலிகமானது என்றும், விநியோகச் சங்கிலி இடையூறுகள் அல்லது சுகாதார அவசரக் காலங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், சுகாதாரத் துறையின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தாதியர் ஆட்சேர்ப்பை, சுகாதார அமைச்சு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நியமன விதிமுறைகள் மற்றும் ஊதிய கட்டமைப்பை மறு ஆய்வு செய்வதும் அதில் உட்படுத்தப்படும்.

ஊதிய மறுசீரமைப்பைப் பரிசீலிப்பதுடன், தற்போதுள்ள பல நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

''தாதியர் கல்வித் திட்டத்தால் முன்வைக்கப்படும் சில அணுகுமுறைகள் அல்லது பரிசீலனைகளை நாங்கள் முன்வைப்போம். ஆம், நாங்கள் அலவன்ஸ்களை வழங்குவதைக் கருத்தில் கொண்டால், ஆம், சில ஷிப்ட் அலவன்ஸ்கள் மற்றும் பலவற்றையும். ஆம், மேலும் நாங்கள் அதிகரிக்கக் கருத்தில் கொள்ளும் அடிப்படைப் பயிற்சிக்குப் பிந்தைய அலவன்ஸ்களையும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் முக்கியமானவை. அண்டை நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் அதிக ஊதியம் வழங்குகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,'' என்று அவர் விவரித்தார்.

தாதியர்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்குக் கால அவகாசம் எடுக்கும் என்றும், அவற்றை குறுகியக் காலத்தில் முடிக்க முடியாது என்றும்டாக்டர் சுல்கிஃப்லி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)