Ad Banner
 உலகம்

58 டன் மருத்துவ உதவிகளை ஈரானுக்கு அனுப்பியது சீனா

17/04/2026 07:43 PM

தெஹ்ரான், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு, அவசரமாகத் தேவைப்படும் 58 டன் மருத்துவப் பொருள்கள் அடங்கிய மனிதாபிமான உதவியை சீனா அனுப்பியுள்ளது.

கடந்த புதன்கிழமை, தெஹ்ரானில், ஈரானுக்கான சீனத் தூதரகத்திற்கும் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இவ்வுதவி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. 

ஈரானிய மக்கள் மீது சீனா எப்போதுமே அக்கறை கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைவில் மீட்டெடுக்கப்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, அனைத்துலக சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஈரானுக்கான சீனத் தூதர் கொங் பெய்வு கூறினார்.

இந்த மருத்துவ உதவியின் மூலம், ஈரானிய மக்கள் மீது சீன மக்களுக்கு உள்ள சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவும், அவர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் கூடியவிரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். 

கடினமான காலங்களில் உதவிக்கரம் நீட்டியதற்கும், பல்வேறு சமயங்களில் ஈரானுக்கு வற்றாத ஆதரவை வழங்கியதற்கும் சீனாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்திருக்கிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]