Ad Banner
 உலகம்

பேச்சுவார்த்தை முடியும் வரை ஈரான் போர் நிறுத்தம் நீடிக்கும் - டிரம்ப்

22/04/2026 05:55 PM

வாஷிங்டன் டி.சி., 22 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் தரப்பிலிருந்து ஒரு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை, ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரானியத் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்த பரிந்துரை ஒன்றை முன்வைக்கும் வரை, தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கச் செயல்படுவதாக, Truth Social தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தங்களின் இராணுவம் முற்றுகையைத் தொடரவும், அனைத்து வகையிலும் தயாராகவும் திறம்படவும் இருக்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். 

இதனிடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அரச ஜதந்திர முயற்சிகளுக்கு வழிவிடும் வகையில், போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டிரம்பிற்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப் நன்றி தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து, மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு விரிவான ‘அமைதி ஒப்பந்தத்தை’ எட்டுவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், எண்ணெய் வருவாய் இழப்பைத் தவிர்ப்பதற்காக ஈரான் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க விரும்புவதாகவும், எனினும், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அதனை "முற்றிலும் முடக்கி" வைப்பதாகவும் டிரம்ப் விவரித்தார்.

ஏழு வாரங்களாக நீடித்து வரும் போரில் அரச தந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தெஹ்ரான் போர் நிறுத்த நீட்டிப்பைக் கோரியதாகக் கூறப்படும் கருத்தை ஈரான் அதிகாரிகள் பகிரங்கமாக நிராகரித்ததோடு, அமெரிக்க முற்றுகையை பலவந்தமாக உடைப்போம் என்ற தங்கள் அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினர்.

அதேவேளையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை ஒரு "போர் நடவடிக்கை" என்றும், அது போர் நிறுத்த மீறலாகும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறினார்.

கட்டுப்பாடுகளை முறியடித்து, தனது நலன்களைப் பாதுகாப்பது எப்படி என்றும், மிரட்டல்களை எதிர்ப்பது எப்படி என்பதும் ஈரானுக்குத் தெரியும் என்றும் அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான இறுதி நேர அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]