சென்னை, 06 மே (பெர்னாமா) -- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகியிருக்கும் நிலையில், அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தவெக-வின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைக்க, விஜய்க்கு ஆதரவு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.
ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி குறித்த பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், தவெக-விடமிருந்து கடிதம் கிடைத்ததைத் காங்கிரஸ் இன்று உறுதிப்படுத்தியது.
புது டெல்லியில் கட்சித் தலைவர்களால் அந்தக் கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
இந்த முடிவினால், திராவிட முன்னேற்றக் கழகம், திமுகவுடனான 20 ஆண்டுக்கால கூட்டணியைக் காங்கிரஸ் முறித்துக் கொண்டது.
காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருக்கும் நிலையில், இன்று விஜய் மாநில ஆளுநரைச் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற வேளையில், இவ்விழா, நாளை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இருப்பினும், 234 சட்டமன்றங்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் ஆட்சி அமைக்க, 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
எனவே, தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் குறைவாகவே உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)