கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- ரோஹிங்யா அகதிகளை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்தும் கருத்துரைத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதுவொரு சிக்கலான மனிதாபிமானப் பிரச்சனை என்று விளக்கமளித்தார்.
அகதிகளைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் செயல்முறை அல்லது அவர்களை மற்ற நாட்டிற்கு அனுப்பும் முயற்சி, இவ்விரண்டுமே இன்னும் ஒரு சுமுகமான முடிவை எட்டாமல் முட்டுக்கட்டையிலேயே நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
''இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. மக்கள் அவர்களைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பேசலாம், ஆனால் எங்கே திருப்பி அனுப்புவது? ஏனெனில், மியன்மார் அரசாங்கத்துடன் நமக்குச் சிக்கல்கள் உள்ளன, அவர்கள் தடுத்து வருகிறார்கள். எனவே, மியன்மார் தலைவர்களுடன் நான் நடத்திய இரண்டு பேச்சுவார்த்தைகளின் போது, இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலாவதாக, நாம் வழங்கும் உதவிகள் அங்கிருக்கும் அனைவருக்கும் சென்றடைவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும், இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டாவதாக, ரக்கைன் மாநிலத்திலும் ஒட்டுமொத்த மியன்மாரிலும் வாழும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத ஏனைய மியன்மார் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் குற்றங்களையும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்,'' என்றார் அவர்.
அதேவேளையில், மலேசிய மக்கள் அனைவரும் தங்களுடைய மனிதாபிமானப் பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் டஅன்வார் நினைவூட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]