Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தேர்வு எழுதுபவர்களை ஏமாற்ற முயற்சி; முடக்கப்பட்டது டெலிகிராம்

17/06/2026 03:46 PM

புது டெல்லி, 17 ஜூன் (பெர்னாமா) -- தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுபவர்களை ஏமாற்ற முயற்சிப்பதற்கு, டெலிகிராம் செய்திப் பரிமாற்றச் செயலி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இந்தியா அச்செயலியைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

இத்தேர்வின்போது, ​​கடந்த மாதம் வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் லட்சக்கணக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தன.

2026 ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுக்கான மறுதேர்வில் பங்கேற்பவர்களை ஏமாற்றுவதற்காக, மோசடிக் கும்பல்கள் இந்தச் செயலியைத் திட்டமிட்டுப் பயன்படுத்தியதற்குப் பதிலடியாக, இந்தியாவில் இதற்கு முன்னர் இல்லாத இந்தத் தடை விதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் தேசிய தேர்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

"போலி வினாத்தாள்களை உண்மையானவை என்று கூறிப் பகிர்ந்து, அவற்றுக்குப் பணம் செலுத்துமாறு மக்களை ஏமாற்றி, மாணவர்களிடையே நிலவும் பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம், மோசடிக்காரர்கள் டெலிகிராம் செயலியைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வந்தனர்,'' என்று தேசிய தேர்வு நிறுவன தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார். 

இந்நிலையில், டெலிகிராம் செயலியை முடக்குவது ஆழமான அமைப்பு ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கப் பெருமளவில் உதவாது என்றும், இத்தடை ஒருவகையில் உதவலாம் என்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் இருவேறான கருத்துகள் நிலவுகின்றன.

''நம் நாட்டில் வினாத்தாள்கள் கசிந்து வருகின்றன. அப்படியானால் அது நமது அமைப்பின் தோல்வி. மேலும் சமூக ஊடக செயலிகளைக் கட்டுப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. (அமைப்பு) தேர்வை இன்னும் சிறந்த முறையில் நடத்தியிருந்தால், (டெலிகிராம் செயலியை முடக்கும்) இந்நடவடிக்கை தேவைப்பட்டிருக்காது,'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவ மாணவர் ஒருவர் கூறினார். 

''டெலிகிராம் செயலி குழுக்களில் நடக்கும் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ​​குறுகிய காலத்திற்கு அதைத் தடை செய்வது நல்லது. ஏனென்றால் இது மிகப் பெரிய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வு. மேலும் இதில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. (வினாத்தாள் கசிவு) அபாயங்கள் சிறிதளவாவது குறைக்கப்பட்டால், அது ஒரு நல்ல முடிவுதான்,'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவ மாணவர் ஒருவர் கூறினார். 

தேர்வின் வினாக்கள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வை இந்திய அரசு ரத்து செய்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]