புத்ராஜெயா, 15 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த முன்னேற்றங்களைப் பொருளாதார அமைச்சு வரவேற்றாலும், அது குறித்த மெத்தன போக்கை மலேசியா கடைபிடிக்காது.
புவிசார் அரசியல் மோதல்களினால் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார சிக்கல்கள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படுவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனை கருத்தில் கொண்டு இது வலியுறுத்தப்படுவதாக,
பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நசிர் கூறினார்.
''அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதுகுறித்த அடுத்தடுத்தப் பொருளாதார நகர்வுகளை நாம் நிச்சயமாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், தற்போதைய உலகளாவியச் சூழலைக் கவனிக்கும்போது, நாம் மீண்டும் ஒரு மெத்தனமான அல்லது அலட்சியமான நிலைக்குத் திரும்பிவிட முடியாது. ஏனெனில், இந்தச் சுமுகமான சூழல் கூட, எதிர்பாராத வெளிப்புறக் காரணங்களால் எந்த நேரத்திலும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இன்னும் இருக்கவே செய்கின்றன'', என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பொருளாதார அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள வியூக வர்த்தக பாதைகளை மீட்டெடுப்பது மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பது ஆகியவை கவனம் செலுத்தப்பட வேண்டிய விவகாரங்களில் அடங்கும் என்று அக்மால் நஸ்ருல்லா விவரித்தார்.
எனவே, உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, பொருளாதார அழுத்தங்களைக் குறைப்பதற்காக, அமைச்சு தொடர்ந்து தணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, 2026-ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் பணவீக்க மதிப்பீட்டை 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை பொருளாதார அமைச்சு தக்கவைத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
உலக அரசியல் நிச்சயமற்ற தன்மையால் தளவாடச் செலவுகள் மற்றும் பொருளாதார உள்ளீட்டு விலைகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
''எனவே அடுத்தகட்ட எதிர்பார்ப்பைப் பொறுத்தமட்டில், இறுதியாகப் பதிவுசெய்யப்பட்ட தரவுகளின்படி பணவீக்கத்தை நாம் இதுவரை சுமார் 1.9 விழுக்காட்டில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியிருந்தாலும், இந்த அழுத்தம் தொடர்ந்து பணவீக்கச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாக அறிவோம். இருப்பினும், இந்த ஆண்டு நாம் இலக்காகக் கொண்டுள்ள மற்றும் 2026-ஆம் ஆண்டிற்கான நமது மதிப்பீட்டின்படி, பணவீக்கம் 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரையிலான ஒரு சாதகமான வரம்பிற்குள் இருக்கும் '', என்றார் அவர்.
பணவீக்க அழுத்தத்தைக் குறைப்பதற்காக பொருளாதார அமைச்சு தணிப்பு மற்றும் இதர மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் விளக்கினார்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)