Ad Banner
Ad Banner
 பொது

எம்.எம்.எம் தலைவராக டான் ஶ்ரீ நளினி நியமனம்

15/06/2026 04:58 PM

கோலாலம்பூர், 15 ஜூன் (பெர்னாமா) -- கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டான் ஶ்ரீ நளினி பத்மநாதன் மலேசிய ஊடக மன்றம், MMM-இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், 2025-ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்றச் சட்டத்தின் கீழ் உள்ள நாட்டின் ஊடகத் துறை சுய ஒழுங்குமுறை அமைப்பிற்கும் அவர் தலைமையேற்கிறார்.

கடந்த மே 26-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மலேசிய ஊடக மன்ற வாரிய உறுப்பினர்களால் டான் ஶ்ரீ நளினியின் நியமனம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஊடகத் துறைக்கான சுதந்திரம் உட்பட அதிகாரப்பூர்வ மற்றும் பொது நலன் சார்ந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பாகத் தனது பங்கை வலுப்படுத்துவதில் இந்நியமனம் முக்கியம் என்று MMM கூறியது.

நீதித்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய அவர் கடந்த பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அக்காலகட்டத்தில், உயர் நீதிமன்றங்களின் மூன்று நிலைகளிலும் அவர் பணியாற்றியதோடு, அரசியலமைப்பு மற்றும் வணிகச் சட்டத் துறைகளில் முக்கியத் தீர்ப்புகள் உட்பட, சுமார் 325 தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்.

மலேசியாவின் உயர்மட்ட நீதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையும் இவரைச் சேரும்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)