Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மை-லைசன் பி2 திட்டம் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் நிறைவடையும்

16/06/2026 05:00 PM

பத்து பஹாட், 16 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தங்களின் முறையான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், மை-லைசன் பி2 திட்டம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப் போக்குவரத்து அமைச்சும் சாலை போக்குவரத்துத் துறையும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

இத்திட்டம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்பவர்கள், சட்டப்பூர்வமான, பாதுகாப்பான மற்றும் முறையான ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் ஒரு முயற்சி ஆகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் மூலம் தகுதியுடைய அனைவரும் எவ்விதப் பொருளாதாரப் பின்னடைவும் இன்றி, எளிதான முறையில் ஓட்டுநர் உரிமத்தை பெற வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

இவ்வாண்டுக்கான மை-லைசன் பி2 (MyLesen B2) திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியுதவியின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30,000-க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்களை ஓட்டும் போதோ அல்லது மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் போதோ, இளைஞர்கள் தற்போது நடைமுறையில் உள்ள சாலை போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதே தங்களின் முக்கிய இலக்கு என்றும், அதனை எட்ட முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர் பத்து பஹாட்டில் உள்ள யோங் பெங் 1 சீனப் பள்ளியில் நடைபெற்ற இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்,  மை-லைசன் பி2 (MyLesen B2) திட்டம் மற்றும் பள்ளிகளுக்கான மை-லைசன் பி2 (MyB2S) திட்டம் ஆகியவற்றை அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)