கோலாலம்பூர், 16 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் கரிம வரியை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
தொழில் நிறுவனங்களின் தயார்நிலை மற்றும் அதற்கான கொள்கை வரைவுகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் கரிம வரி விதிப்பு நடைமுறை, எதிர்காலத்திலும் தொடரும் என்று இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் தெரிவித்தார்.
''கரிம வரி விதிப்பை எப்போது செயல்படுத்துவது என்ற சரியான நேரத்தை மட்டுமே நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம். முதலாவதாக, எனது அமைச்சும் இதற்கான ஒரு கட்டமைப்பை மட்டுமே உருவாக்குகிறது. அந்தக் கட்டமைப்பின் மூலமே நாம் கரிம வரியை அறிமுகப்படுத்த முடியும். ஆனால், உண்மையில் இந்த வரியை நடைமுறைப்படுத்துவது என்பது நிதி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான செம்பனை எண்ணெய் தொழில்துறை மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர், டத்தோ ஆர்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கரிம வரி மூலம் கிடைக்கும் வருவாயை, பருவநிலை மாற்றத் தழுவல் திட்டங்கள், காடுகள் பாதுகாப்பு, நிலையான நில நிர்வகிப்பு ஆகிய திட்டங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் மற்றும் எரிசக்தி விநியோக நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, கரிம வரி விதிப்பை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஆர்தர் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)