Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

43 ஆண்டு காலக் காத்திருப்பு: பண்டார் சிகாமட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விளையாட்டுத் திடல் வசதி

16/06/2026 07:55 PM

சிகாமட், 16 ஜூன் (பெர்னாமா) -- பண்டார் சிகாமார் தமிழ்ப்பள்ளியின் 43 ஆண்டுக் கால, நீண்ட காத்திருப்பு தற்போது ஒரு சுமுகமான தீர்வை எட்டியுள்ளது.

பள்ளிக்கு உகந்த மற்றும் மேம்பட்ட விளையாட்டுத் திடல் வசதியை அமைப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கான முன்கூட்டிய நிலப் பயன்பாட்டு அனுமதி கடிதம், தற்போது பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த 'லாட் 8740' நில எல்லைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முயற்சி, வழிவகுத்துள்ளதாக செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

இந்த நீண்ட காலப் பிரச்சனை காரணமாகவே, அந்நிலத்தை இதுவரை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வரைபடத் திட்டங்களை தாம் நேடியாகவே கல்வி அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக டாக்டர் சலிஹா கூறினார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, பல அரசாங்க நிறுவனங்களின் பதிவுகளில் உள்ள நில எல்லை விவரங்கள் வெவ்வேறாக மாறுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இத்தகவல் முரண்பாடே, அப்பள்ளியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதற்கான முதன்மைக் காரணமாக அமைந்தது என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பான அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, பள்ளி நிர்வாகம் தங்களின் மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டு வசதிகளின் மேம்பாட்டை மேலும் முறையான வகையில் திட்டமிட முடியும் என்று டாக்டர் சலிஹா விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)